Image

http://www.pustaka.co.in

சுண்டல் செல்லப்பா

Sundal Chellappa

Author:

ஜே. எஸ். ராகவன்

J.S. Raghavan

For more books

http://pustaka.co.in/home/author/js-raghavan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

முன்னுரை

1. திருப்பள்ளி எழுச்சி!

2. கிட்டு மாமா

3. ராப்பிச்சை!

4. புருவமே கண்ணாயினார்!

5. தலைக்கு வந்தது!

6. அஃறிணையும் உயர்திணையும்!

7. தீபாவளிஃபைல்

8. கணக்கு சரியாப் போச்சு!

9. மகா டிராமா

10. சுண்டல் செல்லப்பா

11. மழையா? வெயிலா?

12. சாந்தி நிலவ வேண்டும்!

13. சுவற்று வாசகங்களின் மறுபக்கம்!

14. 1.1.11

15. கட்டாயம் காதல் கல்யாணம்தான்!

16. புத்தக 'சிந்தை'

17. பரிகாரங்கள்

18. கைக் கட்டு!

19. ஜானி வாக்கர்!

20. கையை அசைக்காதீங்க!

21. பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியம்?

22. மூக்கைப்பிடிக்க...

23. திருவண்ணாமலைக்கிளி!

24. பிளாக்பெரி

25. மேலே பாய்ந்த பூனை!

26. மீண்டும் மியாவ்!

27. முட்டியோட ஒரு முட்டி மோதல்!

28. காக்க... காக்க...

29. சோறு போடும் சுத்தம்

30. கிரிக்கெட்டும் நடனமும்!

31. 'இந்த வருஷம் வெய்யில் அதிகம்'

32. பிரசவவேதனை!

33. செல்லும் சொல்லும்!

34. பேஸ்புக்கில்உதிராத முத்துக்கள்

35. டமால்! டுமீல்!

36. நானொரு விளையாட்டு பொம்மையா?

முன்னுரை

நவராத்திரி, கடற்கரை, பஜனை மடம் போன்றவற்றுடன் பரவசத்துடன் இணைத்துப் பேசப்பட்டு, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு ஆர்வத்துடன் கொரிக்கப்படும் சுண்டல்களிலும் நகைச்சுவையைப் போன்று பலவகைகள் உண்டு. பட்டாணி, கடலைப் பருப்பு, கொத்துக்கடலை, வேர்க்கடலை, பாப்கார்ன் போன்ற பல திருநாமங்களுடன் கச்சிதமாக முடையப்பட்ட தொன்னைகளில் வழங்கப்படும் சுண்டல்களும், நகைச்சுவையைப் போன்று சுண்டிய முகங்களை செந்தாமரையாக மலரவைக்கும் திறனுடையது. சுண்டல், கிண்டல் இரண்டும் ஒலி ஓசையில் ஒத்திருக்கும் உடன்பிறவா சகோதர வார்த்தைகள்.

வெந்தால்தான், கடலைகளோ, பருப்புகளோ சுண்டலாக முடியும். தான் வெந்து, உண்பவரை வேக வைக்காது மகிழவைக்கும் சுண்டல், கொறிக்கும் வகை சிற்றுண்டிகளில் பேராண்டி, எவ்வாறு, கடற்கரையும் காதலும், வெண்ணிலாவும் வானும் போல இணைந்து இருக்கின்றனவோ, அவ்வாறே காதலும் சுண்டலும் பிணைந்து இருக்கின்றன என்று சொன்னால், சில காதலர்கள் சண்டைக்கு வருவார்கள்.

காரணம், நறநற மணலை அரிந்துகொண்டே கடலை போடும்போது, தேங்காய், மாங்காய் பிணைந்த பட்டாணி சுண்டலை விற்கும் சிறுவர்கள், செவ்வனே ஆரம்பித்து, ருசிகரமாக நடந்துகொண்டிருக்கும் சிவபூஜையில் கரடியாக மூக்கை நுழைப்பதால்தான். இருப்பினும், காதல் களித்து கல்யாணத்தில் முடிய, காதலர்கள் சுண்டல் உண்ண வேண்டும் என்று பட்டினப்பாக்க கிளிஞ்சல் சித்தர், சுண்டலுடன் நகைச்சுவையையும் பரிமாற்றக்கொள்ள வேண்டும் என்று செப்பி அருளியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோவில்களில் பக்தர்களுக்கும், கடற்கரைகளில் காதலர்களுக்கும் கிடைக்கும் சுவையான சுண்டலின் பெயரைத் தாங்கியிருக்கும் இந்தப் புத்தகத் தொன்னையில் வழங்கப்படும் கட்டுரைகள், 'தமாஷா வரிகள்' என்கிற தலைப்பில் வட்டார ஏடுகளான.அண்ணா நகர் டைம்ஸ் மற்றும் மாம்பலம் டைம்ஸில் வாரம் ஒன்றாக வெளிவந்தவை. கொறிக்கவும், கொறித்துக் கொண்டே சிரிக்கவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த விநியோகத்தை ஸ்பான்ஸர் செய்த வட்டாரஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஓவியர் நடனம் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த கையோடு, விரைவில் ஜீரணம் ஆகிவிடும் (அல்லது பல நாட்கள் ஆகிவிடாத) ஒரு மாலைப்பொழுதின் சிற்றுண்டிக்காகவே பெரிய தொகையை, தற்காலத்தில் பள பள 'பவன்'களில் செலவழிக்க அஞ்சாத நெஞ்சங்கள், இப்புத்தகத்தை வாங்க சிறுதொகையை ஒதுக்கி, பரிவுடன் வழங்கப்படும் சுண்டல் சுவைத்து இன்புற வேண்டுகிறேன்.

அன்புடன்,

ஜே.எஸ்.ராகவன்

1. திருப்பள்ளி எழுச்சி!

டிக் கறக்கிற மாட்டை ஆடிக்கற; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கற என்ற பழமொழியைக் கடைப்பிடிக்கும் பூந்தமல்லி வக்கீல் குமாஸ்தா குமாரசாமி, பொழுது விடிந்தவுடன், மரவட்டையாகச் சுருண்டிருக்கும் தன் மூன்று மகன்களுக்குத் தந்தையாக ஆற்றும் முதற் பணி, அவர்களை விரித்த பாய்களிலிருந்து எழுந்து உட்காரவைப்பதே.

'டேய் துக்காராம், எந்திரி, எத்திரி, எந்திரி' என்று மூன்று தடவை, ஒரு கோர்ட் பியூனின் குரல் வளத்துடன் கூப்பிடும் சத்தம் அக்கம் பக்கம் கேட்டால், அவருடைய மூத்த மகனை எழுப்ப, பெரிய பிள்ளையார் சுழி போட்டுவிட்டார் என்று பொருள். ஆனால், துக்காராம் எளிதாக எந்திரிக்கமாட்டான், சுமார் ஆறு அல்லது ஏழு தடவை, எந்திரி, எந்திரி, எந்திரி என்று ரிபீட் அலாரமாக, ஆரோகணத்தில் அடித்தால்தான் அவன் கண்ணை விழித்துப் பார்ப்பான், எந்திரிச்சவுடன் அவனுக்குப் பசி எடுத்து விடும் என்பதால், ஒரு சொம்பு காப்பித் தண்ணியைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், துக்காராம் சினம் கொண்டு, மறுபடியும் கும்பகர்ணனாகத் தூங்கப் போய்விடுவான்.

ஒரு வழியாக, துக்காராமை விழிப்பு நிலைக்குக் கொண்டு வந்தவுடன், பஸ் ஸ்டாப்பிலிருந்து வெளியே தள்ளப்பட்ட நீண்ட தலைவாழைத் தாராகத் தூங்கும் அடுத்த பிள்ளை லெச்சுமணனிடமிருந்து, ஆட்டம் பாம் வெடிக்கும் சிறுவனாகத் தள்ளி நின்று அவனை எழுப்ப முயலுவார். காரணம், பெயருக்கு ஏற்ப லெச்சுமணன் கோவக்காரன், தூக்கத்திலிருந்து எழுப்புபவர் யாராக இருந்தாலும், முதற்கண் பளாரென்று அறைந்துவிடுவான்.

லெச்சுமணனை எழுப்ப, குமாரசாமிக்கு மரத்திலிருந்து மாவிலையைப் பறிக்க உபயோகிக்கும் துரடு தேவைப்படும், மேற்படி துரட்டைக் கையில் ஏந்தி, அவனிடமிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்க முடியுமோ அவ்வளவு தூரம் எட்டி நின்று, வலது பாதத்தை துரட்டின் கூர்மையான பகுதியால், சுமார் ஆறு தடவை நெருடுவார். எழாவது தடவை முயற்சிக்கும் முன், லெச்சுமணன் துள்ளி எழுந்து, தன்னை எழுப்பிய நைனாவை அடிக்க வரும் முன், கையில் உள்ள தண்ணீர் சொம்பை அவனை நோக்கி வீசுவதுபோல் பாய்ச்சல் காட்டுவார்.

E:\pustaka\scanned books\sundal sellappa\1.jpg

தண்ணீர் என்றால் அலர்ஜியான லெச்சுமணன், எதிர்முனைத் தாக்குதலாக, ஒரு சொம்பு குளிர்ந்த நீர் தன் மூஞ்சியில் விழுந்து தன்னைச் சுத்தப்படுத்தி விடுமோ என்று நடுங்கி, பாம்பாக அடங்கி, ஊரே கேட்கும் அளவிற்கு, சத்தமாக கொட்டாவி விட்டுவிட்டு, கடன்களைக் கழிக்க, கொல்லைப் புறத்துக்கு நடையைக்கட்டுவான்.

மூன்றில் இரண்டு பேரை, அசம்பாவிதம் இல்லாமல் எழுப்பிவிட்ட திருப்தியுடன், குமாரசாமி அடுத்த மகனை எழுப்புவதில் கவனம் செலுத்துவார். தூக்கத்திற்காக கண்களை மூடின கையோடு, தன் இரு செவிப்பறைகளையும் இறுக மூடிவிடும் மூன்றாவது வாரிசான கண்ணப்பாவிற்கு, 'எந்திரி', 'துரடு' போன்றவை துரும்புகள். அவற்றுக்கு அவன் லேசில் மசியமாட்டான்.

இவனை எழுப்ப, ஒரு பித்தளைத் தாம்பாளமும், இரண்டு பவுண்டு சுத்தியும் தயாராக இருக்கும். சிவன் கோவிலில், சாயரட்சை பூஜை கற்பூர ஆரத்தியின்போது, டங், டங்கென்று அடிக்கப்பெறும் பெரிய ஜால்ராவின் ரேஞ்சிலும், அடுத்த சில நிமிடங்களில் ஸ்டேஷனுக்கு வரப்போகும் பாசஞ்சர் வண்டிக்காக, தண்டவாளத்துண்டில் அடிக்கப்படும் மணியின்

நாதத்தை ஒத்தும், குமாரசாமி தாம்பாளத்தில் சுத்தியால்டங் டங்கென்று சத்தம் எழுப்புவார்.

மூன்று மணி அடித்தவுடன், கண்ணப்பா கண்களைத் திறந்து, முழிச்சி 'அட நிறுத்துங்கப்பா' என்று சொல்லி, அநேகமாக உட்கார்ந்து விடுவான்.

குமாரசாமிக்கு மனைவி இல்லை, இரண்டாம் தாரமாக, கல்யாணம் செய்துகொள்ளவிருப்பமும் இல்லை. ஏனென்றால், முதல் மனைவியால் தாம்பத்தியத்தைக் கண்டு அவ்வளவு மிரண்டுபோயிருந்தார்.

சுமார் பத்து வருஷங்கள் கழித்து, பூந்தமல்லியிலிருந்து வந்திருந்த நண்பன் ஜெகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கமான, தேரடி பாச்சா, கணக்கு வாத்தியார் கொத்தமல்லி, பவழமல்லி வீட்டு ஆம்பளை பேபியைப் பற்றிய சுவாரசிய அரட்டை முடிந்தவுடன், குமாரசாமி டாபிக்குக்குள் நுழைந்தோம். அவரோட பசங்களை, இன்னும் அப்படித்தான் எழுப்பிக்கொண்டிருக்கிறாரா? என்று கேட்டேன்.

சிரித்துக்கொண்டிருந்த ஜெகன், வழக்கமில்லாமல் சரியாகி விட்டான். 'இல்லே, ராகவா, அது ஒரு சோகக்கதையா முடிஞ்சிடுத்து. கல்லு மாதிரி இருந்த குமாரசாமி, திடீர்னு ஒருநாள் படுத்துட்டார். கோமா வந்து, ஒரு மாசம் பேச்சு மூச்சு இல்லாம கிடந்தார்'.

'அட!? அப்புறம் என்ன ஆச்சு?'

அதான் ஐரனி. மூணு பசங்களும், ஒரு மாசமா அப்பாபடுக்கை பக்கத்திலேருந்து, அப்பா எந்திரிங்கப்பா, எந்திருங்கப்பா, எழுந்து, 'இப்படிச் சோம்பேறியா வளர்ந்த எங்களை தாம்பாளத்தில் சுத்தியாலே அடிக்கிறா மாதிரி அடிங்கப்பா'ன்னு புலம்பிண்டிருந்தாங்க. ஆனா, பசங்க நெஜமா முழிச்சிண்டதைப் பார்த்து சந்தோஷப்படக் குடுத்துவைக்காம, குமாரசாமி முழிச்சிக்காம ஒரேடியாதூங்கிட்டார்'.

2. கிட்டு மாமா

மாமா என்ற சொல், ஒரு விபரீத அர்த்தத்துடன் வலம் அல்லது இடம் வந்தாலும், தாய்மாமா எனப்படுபவர், பொதுவாகவே ஒரு குஷியான உறவினராக அமைந்து விடுவது உண்டு. அரசியல்வாதிகளிலேயே, ஒரு சிலர் விதிவிலக்காக நேர்மையானவர்களாக இருப்பதுபோல், சில தாய்மாமன்கள் அரக்கர்களாக இருந்து விடலாம். ஆனால் இந்தக் கட்டுரை, அன்னையின் கண்டிப்பு இல்லாத, ஆனால் அவளை ஒத்த அன்பைப் பொழிந்த என்னுடையதாய்மாமாகிட்டுவைப்பற்றி. கிட்டு மாமாவைப்பற்றிய காவியம், குச்சி ஐஸ் படலத்துடன் தொடங்குகிறது.

பூந்தமல்லி வரதர் உத்சவத்தின் சிறப்பு அம்சம், நடமாடும் குச்சி ஐஸ் வண்டி. 'டேய், அதை வாங்கிச் சாப்பிட்டா, உன்னை வரதராவ் ஸ்கூலிலிருந்து நிறுத்திட்டு, பால்கார பார்சாரதியோட அரை டஜன் டெல்லி எருமை மாட்டை மேய்க்க அனுப்பிடுவேன்' என்று என்னுடைய அன்புத் தாய், ஃபட்வா பாணியில் அறிக்கைவிட்டிருந்தாலும், 'அடவாடா, நான் உனக்கு வாங்கித் தரேன்'னு, கிட்டு மாமா என் கையை மிருதுவானவெல்வெட் பிடியாகப் பிடித்துக்கொண்டு, கோவில் வளாகத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்.

ஒரு தச்சர், மரத்தை இழைப்புளியால் இழைப்பது போல், ஒரு பளிங்கு ஐஸ்கட்டியை சரக் சரக்கென்று தேய்த்து, ஐஸ் துகள்களை ஒரு குச்சியில் அமுக்கி, கிண்ணென்று ஒட்ட வைத்து, அதன்மேல் மிட்டாய் கலர் சர்பத்தைப் பரவலாகப் பாய்ச்சி, கொடுக்கப்பட்டதில் அமுதத்தை, தான் பரவசத்துடன் சுவைத்து முடித்ததோடு நிற்காமல், வீட்டில் கட்டியிருந்த எல்லோர் முன்னாலேயும், என்னுடயை ரோசாக் கலர் உதடுகளைக் கெத்தாகக் காண்பிக்கமுடிந்த தைரியம், கிட்டு மாமா பின்னால் கடேரென்று கறுப்புப் பூனைகமாண்டோவாக நின்றுகொண்டிருந்ததால்தான்.

'அஞ்சலிதேவியோட லிப்ஸ் மாதிரி ரத்தச் சிவப்பா இல்லே?' என்று சொல்லி, எனக்கு கிளுகிளுப்பூட்டிய கிட்டு மாமா, சதா சொத்க் சொதக் என்று கூடைக்கணக்கில் சாணி போட்டுக் கொண்டிருக்கும், கறுத்த எருமை மாடுகளின் போஷகராக மாற வேண்டியிருந்த என்னை மீட்ட ஹீரோவாகத் தோன்றினார். அவர் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன், அந்தக் காலத்தில், அஞ்சலி தேவின்னா எனக்கும் ரொம்ப இது!

தாய் மாமாக்களுக்காக சில சிறப்பு டியூட்டிகள் உண்டு. அதில் தலையானது, ஊஞ்சலுக்கு முன்னால் மாலை மாற்றும் நடத்தினோம். காரணம் ஒண்ணும் பெரிசா இல்லே, ரெண்டு பேரும் சாப்ட்வேர் புரொபஷனல், எக்கச்சக்க சம்பளம், மானாவாரியா ஈகோ. அவங்க ஜார்கன்லே சொல்லணும்னா, ஈ டாட்கோ, டிவிட்டர், பிளாக்பெரி, கிண்டில்னு வருத்திண்டு, ஒருத்தருக்கொருவர் அபூர்வமா பாத்துக்கும் போது பேசிக்கிறதில்லை, அதான்'.

'அப்புறம்?'

'சரி பண்ணிட்டோம். கம்ப்யூட்டர் மாதிரி ரீபூட் பண்ணறேன்னு கை கோத்துண்டாங்க. ரெண்டு பேரும், தன்னோட பக்கத்தை எடுத்துச்சொல்ல, நானும் சீனுவும் ஹெல்ப் பண்ணினோம்'.

'கல்யாணத்தன்னிக்கு மாலையை எடுத்துக்கொடுத்து உதவின மாதிரியா?'

புருவங்களை உயர்த்தி, அந்தத் தாய்மாமா மந்தகாசத்துடன் என்னைப் பார்த்தார். என் கையைப் பரவசத்துடன் பிடித்துக்கொண்டார்.

வரதர் உத்சவத் திருவிழாவின்போது அனுபவித்த வெல்வெட் பிடி மாதிரியே இருந்தது. மாறவேயில்லை!

3. ராப்பிச்சை!

சென்ற ஞாயிற்றுக்கிழமை, பொழுது போகாமல் சங்கிலிக் கொட்டாவிகள் விட்டுக்கொண்டிருந்தபோது, தம்பையா வந்து சேர்ந்தார். தம்பையாவின் கபாலத்தில் உள்ள நண்டு, அவருடைய மூளையைப் பிராண்டும்போதெல்லாம், நேரே என்னிடம் வந்து சேர்த்துவிடுவார். தடுத்து ஆட்கொள்ளவேண்டும்.

ஸார், இப்போல்லாம் ராப்பிச்சைகளைக் காணறதில்லையே ஏன்? அந்தக்காலத்தில், சுமார் ராத்திரி எட்டு மணிக்கு, 'அம்மா… தாயே....ன்னு நீளமா குரல் கேக்கும். இப்போல்லாம் ஏன் அது கேக்கறதில்லே'.

தம்பையாகூப்பிட்டுக் காண்பித்த சாம்பிள் 'அம்மாதாயே'யில் பசி இருந்தது. அவசரம் இருந்தது. பரிதாபம் இருந்தது. யாசகம் இருந்தது. பன்ச் இருந்தது.

'இன்னோரு கதை சொல்லு அப்பான்னு, தூங்காம அடம்பிடிச்ச குழந்தைகளைப் பயமுறுத்த, அந்தக் குரல் செளகரியமாய் இருந்தது. ரொம்ப நாளா, எங்க தெருவுக்கு ஒரு ராப்பிச்சை வருவான். கருப்பு கம்பளி, வெள்ளை தாடி, அலுமினியத் தட்டு, கையிலே பூண் போட்ட கழி, ஏதோ, கோலமாவு விக்க போவான். வியாபாரி மாதிரி நிக்காம, குரல் குடுத்துண்டே யாராவது மகராசி, 'இங்கவாப்பான்'னு கூப்பிட்டாதான் நின்னு. ஏற்பது இகழ்ச்சின்னாலும், ஐயமிட்டு உண்ணுங்கிற பரிகாரத்திலே அது அடிபட்டுப்போகிறதுங்கிற லாஜிக்கோட, கையை நீட்டி வாங்கிண்டு போவான். இன்னோரு ஆள், சனிக்கிழமை மாத்திரம் வருவான். சொகமா பாடுவான், அவனோட 'பூமியில் மானிட ஜன்மம் அடைந்திட...'ங்கிற எம்.கே.டி. பாட்டு, இன்னும் என் காதிலே வண்டா ரீங்காரிச்சிண்டு இருக்கு. இப்போ அவங்க எல்லாம் எங்கே போயிட்டாங்க? ஏன் வர்றதில்லே? அவங்களுக்கு என்ன ஆச்சு'.

தம்பையாவின் கேள்விச் சரங்களில் ஒலித்த தொனி, ஏதோ ராப்பிச்சைகள் ஓரினமாக, என் பேச்சைக் கேட்டுக்கொண்டுதான் அந்தக் காலத்தில் வலம் வந்ததுபோலவும், காலப்போக்கில் என் மறு பேச்சைக் கேட்டுதான் மறைந்துவிட்டது போன்ற மாயையையும் ஏற்படுத்தியது.

குடுகுடுப்பாண்டிகள், குருவிக்காரர்கள் மாதிரி, ராப்பிச்சைகள் மறைந்த காரணங்களைத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கும் போது, தம்பையா இடைவெளி விடாமல் தொடர்ந்தார்.

E:\pustaka\scanned books\sundal sellappa\2.jpg

ஒரு அபூர்வ சம்பவத்தைச் சொல்லணும். ஒரு ராத்திரி அந்த அதிசயம் நடந்தது. ராத்திரி எட்டரை மணிக்கு, 'அம்மா... தாயே... 'ங்கிற கருப்பு கம்பளி பிச்சைக்காரன் குரல், இடைவெளி விட்டுக் கேட்டு, நகர்ந்து போகாமல் எங்க வீட்டு வாசலிலே நின்னு, தொடர்ந்து நாலு தடவை கேட்டது. என்ன அதிசயம்னு, குடிக்கப் பால் கொண்டு வந்த பார்வதியைக் கேட்டேன், அவள் உதட்டைப் பிதுக்கி எனக்கும் புரியலேன்னு பதில் கொடுத்தாள். வாசலில் போய்ப் பார்த்தேன். கையில், பக் பக் அரிக்கேனுடன் பார்வதியும் சேர்ந்துகொண்டாள்.

'அம்மணி, இந்த மோதிரம் உங்களுடையதாபாருங்க'.

'அட ஆமா? எப்படி உன் கிட்டே...'

'நேத்து நீங்க போட்ட அரிசி உப்புமாலே இருந்ததும்மா. அசல் தங்கம்னு நினைக்கிறேன். சுத்தமா தேச்சுக் களுவிட்டேன், சாக்கிரதைம்மா, அரிசி உப்புமா ஜோரா இருந்துதுங்க, உங்க வீட்டுப் பண்டம்னா கேக்கணுமா? மோதிரம் பத்திரம். வர்ட்டா? அம்மா... தாயே...'.

'இந்த மாதிரி, தொழில் தர்மத்தோட இருந்த ராப்பிச்சைக் காரர்களெல்லாம் எங்கே?' என்று தம்பையா ஆதியில் போட்ட கொக்கியை, பாதாளக்கொலுசாக கிளறிக் கேட்டார்.

நான் தொண்டையைக் கனைத்துக்கொண்டேன்.

'இதுக்குப்பதில் நான் சொல்ல வேண்டியதில்லே, உங்களுக்கே தெரியும். இருந்தாலும், என்னை ஆழம் பாக்கறீங்க. முன்னெல்லாம், ராத்திரி சமையலிலே கட்டாயம் மிச்சம் இருக்கும், திடீர்னு யாராவது விருந்தாளி வந்தா சாப்பிட, இப்போல்லாம் இட்லியைக்கூட டயட்டுங்கிற பேரிலே, தலைக்கு இவ்ளோன்னு எண்ணிதான் கணக்கா வாக்கறாங்க, அந்தக்காலத்திலே, மீந்ததை வெச்சுவைக்க பிரிட்ஜ் கிடையாது. அதனாலே, ராப்பிச்சையைத் தேடினாங்க. அவங்களும் வந்தாங்க. இப்போ மீதம் வர்றதில்லே'. வந்தாலும், அதை ரெண்டு நாள் வெச்சுண்டு, அப்புறம் வீசிக் கடாச பிரிட்ஜ் இருக்கு. அது மட்டுமா? முன்னெல்லாம், வீட்டிலே சாப்பிட்டுவிட்டு தியேட்டரிலே சினிமா பார்ப்பாங்க, இப்போ, வீட்டிலே டிவியிலே சினிமா பாத்துட்டு, ஓட்டலுக்கு சாப்பிடப்போறாங்க. இந்த மாற்றத்திலே, ராப்பிச்சைக்கு இடம் ஏது?'

தம்பையா என்னை ஆழமாகப் பார்த்தார். 'போறாது. பஞ்ச்சா இன்னும் ஒரு பாயின்ட் சொல்லுவீங்கன்னு ஒரு பட்சி சொல்றது'.

சொன்னேன். 'ஸார், அப்படி மீந்து, ஒரு ராப்பிச்சை வந்தாலும், யாரு ஸார் இந்த அபார்ட்மென்ட் கலாசாரத்திலே, நாலு மாடியோ மூணு மாடியோ, ஆர்த்ரைடிஸ் முட்டியோடயோ, ஆஸ்துமாவோடயோ இறங்கிவந்து பிச்சைக்காரனுக்குப் போடுவாங்க. அதைத்தவிர, பணக்கார பில்கேட்ஸ் வந்து ஹலோன்னு குரல் கொடுத்தாலும், டிவியிலேர்ந்து கண்ணையும் காதையும் பிடுங்கி எடுக்காதவங்க, படு ஏழை ராப்பிச்சைக் குரலுக்கா அசைவாங்க?'

4. புருவமே கண்ணாயினார்!